வெளிநாட்டுச் செலாவணி முகாமைத்துவம்

இலங்கையில் வெளிநாட்டுச் செலாவணி முகாமைத்துவத் தொழிற்பாடுகள் அரசாங்கத்தின் சார்பில் செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தினூடாக இலங்கை மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. வெளிநாட்டுச் செலாவணி முகாமைத்துவக் கொள்கைகள் 1953ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் ஏற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டன. செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டம், தங்கம், நாணயம், கொடுப்பனவுகள், பிணையங்கள், படுகடன்கள், இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள், சொத்துக்களின் மாற்றல்கள் மற்றும் தீர்ப்பனவுகள் என்பனவற்றின் கையாளல்களை ஒழுங்குமுறைப்படுத்துகின்றது.

1977இல் இலங்கையின் பொருளாதாரம் திறந்துவிடப்பட்டமையின் காரணமாக இலங்கை அதன் செலாவணிக் கட்டுப்பாட்டு அமைப்பினை கணிசமானளவிற்கு தாராளமயப்படுத்தியமையானது 1994இல் நடைமுறைக் கணக்கு முழுமையாக மாற்றப்படத்தக்க தன்மையை அடைவதற்கும் கடந்த ஆண்டுகளில் மூலதனக் கொடுக்கல்வாங்கல்களை கணிசமானளவிற்கு தாராளமயப்படுத்துவதற்கும் வழிவகுத்தது.

நாட்டின் பொருளாதாரத்தை விரிவடையச் செய்யும் குறிக்கோளுடனும் மேலும் இலங்கையின் பொருளாதாரத்தை உலகளாவிய பொருளாதாரத்துடன் ஒருங்கிணைக்கும் நோக்குடனும் இலங்கை மத்திய வங்கி, வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல்வாங்கல்களுக்கு ஏற்புடைத்தான விதிகளையும் ஒழுங்குவிதிகளையும் மேலும் தளர்த்தி இலகுபடுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கிறது.